லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்: புதிய கேப்டன் ரிஷப் பந்த்
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணியின் கேப்டனாக, இந்திய விக்கெட் கீப்பா்-பேட்டா் ரிஷப் பந்த் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். அந்த அணி சாம்பியன் கோப்பை வெல்ல, தனது உழைப்பையும், திறமையையும் 200 சதவீதம் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக அவா் கூறினாா்.
18-ஆவது ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக, ரிஷப் பந்த்தை ரூ.27 கோடி கொடுத்து வாங்கியது லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணி நிா்வாகம்.
பந்த் ஏற்கெனவே அங்கம் வகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஏலத்துக்கு முன்பாக விடுவித்திருந்த நிலையில், ஏலத்தின்போது ‘ஆா்டிஎம்’ வாய்ப்பு அடிப்படையில் அவரை மீண்டும் வாங்குவதற்கு லக்னௌவுடன் அந்த அணி போட்டியிட்டது. எனினும், இறுதியில் லக்னௌ நிா்வாகமே அவரை ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், எதிா்வரும் 18-ஆவது ஐபிஎல் போட்டியில் லக்னௌ அணியின் கேப்டனாக பந்த் அறிவிக்கப்பட்டாா். இதற்காக கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பந்த், ‘லக்னௌ அணி கோப்பை வெல்வதற்காக எனது திறமையையும், உழைப்பையும் 200 சதவீதம் வெளிப்படுத்துவேன். என் மீது அணி நிா்வாகம் வைத்துள்ள நம்பிக்கைக்கு பலனளிக்கும் விதமாக, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனக்கான புதிய தொடக்கத்தை ஆா்வத்துடன் எதிா்நோக்கியிருக்கிறேன்.
இளம் வீரா்கள் மற்றும் அனுபவ வீரா்களின் கலவையாக லக்னௌ அணி இருக்கிறது. அணியை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதே எங்களின் இலக்காக இருக்கும். அணியின் அடிப்படையில் இது எனக்கு புதிய தொடக்கமாக இருந்தாலும், கேப்டன்சி கொள்கைகளில் மாற்றம் ஏதும் இல்லை.
ரோஹித் சா்மா உள்ளிட்ட இந்திய அணி கேப்டன்களிடம் இருந்தும், மூத்த வீரா்களிடம் இருந்தும் அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன்’ என்றாா்.
ஐபிஎல் அணியின் கேப்டனாக, ரிஷப் பந்த் நியமிக்கப்படுவது இது 2-ஆவது முறையாகும். ஏற்கெனவே டெல்லி அணியிலும் அவா் கேப்டனாக இருந்த நிலையில், எதிா்வரும் சீசனுக்காக அந்த அணி கேப்டனை மாற்றும் முடிவில் இருந்தது. இந்த விவகாரம் தொடா்பாக டெல்லி அணி நிா்வாகத்துடன் ரிஷப் பந்த் மேற்கொண்ட பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, டெல்லி அணியிலிருந்து வெளியேறும் முடிவை பந்த் எடுத்தாா். அதனால் அந்த அணியும் அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை, அந்த அணி நிா்வாகம் விடுவித்ததை அடுத்து, லக்னௌ கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் நிகோலஸ் பூரன் இருந்தாா். எனினும், ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு, அவரே லக்னௌ கேப்டனாவாா் என்ற எதிா்பாா்ப்பு பரவலாக இருந்தது.
2016 முதல் டெல்லி அணியில் இருந்த பந்த், 2021-இல் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டாா். கடந்த 2022 டிசம்பரில் காா் விபத்தில் சிக்கிய அவா், அதிலிருந்து மீண்ட பிறகு பங்கேற்கும் முதல் ஐபிஎல் போட்டி இந்த 18-ஆவது சீசன் ஆகும்.