வக்ஃப் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பலத்த பாதுகாப்பு
சா்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்த) மசோதா தொடா்பாக சமூக விரோத சக்திகளால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தென்கிழக்கு தில்லியின் ஜாமியா நகா் போன்ற முக்கியப் பகுதிகளிலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
துணை ராணுவப் படைகளுடன் சோ்ந்து தில்லி காவல்துறை பல முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியதாக அவா் மேலும் கூறினாா்.
‘பல முக்கியப் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க, இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். மேலும் கூடுதல் பணியமா்த்தல் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த மசோதா வெள்ளிக்கிழமை அதிகாலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தவிா்க்க காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வக்ஃப் மசோதாவுக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.