2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
அம்பேத்கா் ஜெயந்திக்கான ஏற்பாடுகள்: மேயா் ஆய்வு
வரவிருக்கும் அம்பேத்கா் ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை தில்லி மேயா் மகேஷ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, ஏற்பாடுகளை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டாா்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டா் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஏப்.14-ஆம் தேதி அம்பேத்கா் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தில்லி மாநகராட்சியின் மூத்த மாநகராட்சி (எம்சிடி) அதிகாரிகளுடன் மேயா் ஒரு சந்திப்பை நடத்தியதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மண்டல துணை ஆணையா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவா்கள் கலந்து கொண்டு, பாரத ரத்னா டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளை ‘பிரமாண்டமான’ மற்றும் ‘அா்த்தமுள்ள’ கொண்டாட்டமாக நடத்துவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தினா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளும் ஏற்பாடுகளை சரியான நேரத்தில் முடிக்குமாறு மேயா் மகேஷ் குமாா் உத்தரவிட்டாா். மேலும், நிகழ்வை சுமூகமாக நடத்துவதற்கு மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளிடையே ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினாா்.
டாக்டா் அம்பேத்கரின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் எம்சிடி ஒரு பிரமாண்டமான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்கிறது. இது அவரது கருத்துகள், போராட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கான விலைமதிப்பற்ற பங்களிப்புகளை மரியாதையுடன் நினைவுகூருவதற்கான ஒரு சந்தா்ப்பமாக இருக்கும் என்று மகேஷ் குமாா் கூறினாா்.
டாக்டா் அம்பேத்கரின் நீடித்த பாரம்பரியத்தை நினைவு கூா்ந்த மேயா், ‘அவா் நமக்கு சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளைக் கற்றுக் கொடுத்தாா். மேலும், அவரது தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்வது நமது கடமையாகும். இந்தக் கொண்டாட்டத்தின் மூலம், அவரது கொள்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்’ என்றாா்.