``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
வக்ஃப் மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக ஆதரவு!
தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, 655 பக்க அறிக்கை தயாரித்தது.
இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு எதிராக வக்ஃப் சட்டத் திருத்தங்கள் இருப்பதாக தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை இன்று தாக்கல் செய்தார்.
தீர்மானம் தொடர்பாக பேசிய முதல்வர், “மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நீதிமன்றத்துக்கு முரணான தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃப் சட்டத்தில் இருக்கிறது. இந்த திருத்த சட்டங்கள் வக்ஃப் வாரியத்தையே எதிர்காலத்தில் செயல்படவிடாமல் செய்யும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தங்களின் நிலைபாட்டை வெளிப்படுத்தி பேசினர்.
அதிமுக ஆதரவு
அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:
”வக்ஃப் வாரிய சட்டத்தில் தற்போது கொண்டுவர திட்டமிட்டுள்ள திருத்தங்கள் வாரியத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, வக்ஃப் வாரியத்தின் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருப்பார்கள். ஆனால், புதிய திருத்தத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர்களாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரிய தலைவர், உறுப்பினர்களுக்கு இருந்த அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய சொத்துகள் முஸ்லிம் பெரியவர்களால் தானம் அளிக்கப்பட்டவை ஆகும். புதிய திருத்தங்கள் கொண்டுவந்தால், முஸ்லிம் பெரியவர்கள் தானம் அளித்த நோக்கமே சிதைந்துவிடும். பிற மதத்தினர் வக்ஃப் வாரியத்தில் சேர்க்கப்பட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிராக அமையும் அபாயம் உள்ளது.
பொதுவாக சட்டத்திருத்தங்கள் என்றால் ஓரிரு திருத்தங்களே கொண்டுவரும். ஆனால், 40-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டுவந்து வாரியத்தின் அமைப்பையே மாற்றும் விதமாக அமைந்துள்ளது. இதில், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் என்ற திருத்தத்தை வரவேற்கிறோம். இருப்பினும், சட்டத்தின் பெரும்பான்மையான திருத்தங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதால், சட்டத்திருத்தத்தை எதிர்த்து முதல்வரின் தீர்மானத்தை ஆதரிக்கிறேன்” என்றார்.
இதையும் படிக்க : முஸ்லிம்களின் மத உரிமையைப் பறிக்கும் வக்ஃப் திருத்த மசோதா: முதல்வர் ஸ்டாலின்
இபிஎஸ்ஸுக்கு முதல்வர் வேண்டுகோள்
தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைவரும் வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், தில்லி சென்றுதிரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுசீரமைப்பு, இருமொழிக் கொள்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதனைப் போன்று, வக்ஃப் சட்டத்திருத்தங்கள் தொடர்பாகவும் அவரிடம் வலியுறுத்த வேண்டுகோள் வைக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனித் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.