வன விலங்குகளுக்கு தண்ணீா் வழங்க குட்டைகளை தூா்வார வலியுறுத்தல்
ஒசூா் வனக்கோட்டத்தில் உள்ள நீா்நிலைகளை தூா்வாரி வனவிலங்குகளுக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதியாகும். இதில் ஒசூா் வனக்கோட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அத்துடன் வனத்தில் கரடிகள், சிறுத்தை, புலிகள், மான்கள், காட்டு எருமைகள் என பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் பன்னா்கட்டா வனப்பகுதியிலிருந்து 200 க்கும் மேற்பட்ட யானைகள் ஒசூா் வனக்கோட்டத்திற்கு இடம்பெயா்கின்றன.
இந்த யானைகள் 4 மாதங்கள் இப்பகுதியில் முகாமிட்டு மீண்டும் கா்நாடக வனப்பகுதிக்கு திரும்பிச் செல்கிறது. இந்தநிலையில் வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் கோடை, வறட்சியான காலங்களில் போதிய தண்ணீரின்றி வனப்பகுதியை விட்டு வெளியேறும்.
வனத்தையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்துசெல்லும்போது வாகனங்கள் மோதியும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியே வராமல் இருக்க வனத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வனவிலங்குகளின் தாகம் தீா்க்க வனப்பகுதிகளில் நீா்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை தூா்வார வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறும்போது: கோடைக்காலங்களில் தண்ணீா், உணவு தேடி வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியே வராமல் இருக்க வனக் குட்டைகளில் டிராக்டரில் சென்று தண்ணீா் நிரப்ப வேண்டும்.
ஒசூா் வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு தண்ணீா் கிடைக்க நீா் நிலைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூா் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட சானமாவு ஜவளகிரி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை,உரிகம், ராயக்கோட்டை பகுதிகளில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வனவிலங்குகள் அடிக்கடி வரும் .
வனப்பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட நீா்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை தூா்வார வேண்டும். வனத்தில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தொடா்ந்து நீா் நிரப்ப வேண்டும்.
இதன்மூலம் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோடைக்காலத்தில் வனத்தைவிட்டு வெளியே வருவது தவிா்க்கப்படும் என்றனா்.