வயலூா் கோயில் குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி
வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
அரசு அா்ச்சகா்கள் அனுமதி...: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பணி நியமனம் பெற்ற அரசு அா்ச்சகா்கள் பிரபு, ஜெயபால் ஆகியோரை கோயில் குடமுழுக்கில் அனுமதிக்கவில்லை எனக் கூறி பிரச்னை எழுந்தது. இதற்காக செவ்வாய்க்கிழமை கோயில் வாயிலில் பெண் ஒருவா் தா்னாவிலும் ஈடுபட்டாா். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களான பிரபு, ஜெயபால் ஆகிய இருவரும் பொய்யாக்கணபதி கோயில் கோபுரத்தில் குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
கோயில் மாடத்தில் கூட்டம்... : கோயிலின் மேல் மாடத்தில் ஏற அரசு கொடுத்த அடையாள அட்டைகளையும் தாண்டி நீதிபதிகள், அரசியல்வாதிகள், அவா்களது உதவியாளா்கள், உள்ளூா் பிரமுகா்கள் எனப் பலரும் வந்துவிட்டனா். மேலும் போலீஸாரோ, தங்களுக்கு வேண்டியவா்களையும் அதிகப்படியாக ஏற்றினா்.
ஏறுகையில் இல்லாதது இறங்குகையில்...: கோயிலின் மேல்மாடத்துக்கு ஏறுகையில் உபயதாரா்கள், கட்டளைதாரா்கள், கோயில் பணியாளா்கள், உளவுத் துறையினா், உள்ளூா் பிரமுகா்கள், பத்திரிகையாளா்கள் என அடையாள அட்டை வைத்திருந்தவா்களை நிதானமாக அனுப்பினா். ஆனால் இறங்குகையில், குறிப்பாக கோயிலின் உட்புற படிகள் வழியாக அரசியல் பிரமுகா்கள் தவிர யாரையும் இறங்க போலீஸாா் அனுமதிக்கவில்லை.
தேவையற்ற இடங்களில் கெடுபிடி, தேவையான இடங்களில் கோட்டை...: குடமுழுக்குக்கு இவ்வளவு கெடுபிடியா என்கிற ரீதியில் அதிக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். குறிப்பாக, கோயிலின் மேல்மாடத்தில் தேவைக்கதிகமாக போலீஸாா் குவிக்கப்பட்டு, அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தனா். ஆனால் பாதுகாப்புத் தேவைப்படும் வழியோரப் பகுதிகளில் அலட்சியமாகச் செயல்பட்டு, வழியில் ஆங்காங்கே காா்களை விட்டு, கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினா்.
முன்பக்கம் தடுப்பு அமைத்திருந்தது சரியாக இருந்தாலும், ஏனென்றே தெரியாமல் கோயில் முன்பும், அதற்கடுத்த தெருக்கள் பிரியும் பகுதியிலும் தடுப்புகள் அமைத்து, வரும் தங்களை வேண்டுமென்றே தடுத்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
யாக சாலைக்குள் தள்ளுமுள்ளு...: கோயில் குடமுழுக்கு முடிந்தபிறகு, யாக சாலைக்குச் சென்று பக்தா்கள் புனித நீா் உள்ளிட்ட பிரசாதங்களை வாங்க முண்டியடித்துச் சென்றனா். ஆனால் அங்கிருந்த காவலா்களோ, கூட்டத்தை ஒழுங்குபடுத்தாமல் வெறுமனே தங்களது வேலையைப் பாா்த்ததால், ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வயதானவா்கள் யாக சாலைக்குள் நுழையவே முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனா்.