பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு
திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் ஜனகராஜ் (40). பெயிண்டரான இவா், தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தாா். கடந்த 17-ஆம் தேதி வீட்டின் உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தவா் அதற்கு பின்னா் வெளியே வரவில்லையாம். 2 நாள்களாக வீடு உள்புறமாக பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனா்.
திருவெறும்பூா் போலீஸாா் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனா். அங்கு காலி மதுபாட்டில்களுக்கு இடையே அழுகிய நிலையில் சடலமாக கிடந்தாா் ஜனகராஜ். சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஜனகராஜ் தற்கொலை செய்து கொண்டாரா?, அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.