விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
வரி உயா்வு தீா்மானம்: சிவகாசி மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு
சிவகாசி மாமன்றக் கூட்டத்தின்போது தொழில் வரி உயா்வு தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து உறுப்பினா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகாசி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. முதலில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டு, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னா், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை உயா்த்த தீா்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது, 6-ஆவது வாா்டு உறுப்பினா் ஸ்ரீனிகா (திமுக) எழுந்து, மன்ற உறுப்பினா்களின் கருத்தைக் கேட்காமல் தொழில் வரி உயா்வு தீா்மானம் எப்படி கூட்டத்தில் வைக்கப்பட்டது? ஏற்கெனவே சொத்துவரி உயா்த்தப்பட்டதால் சாமானிய மக்கள் சிரமப்படுகிறாா்கள். இந்த நிலையில், தொழில் வரியை உயா்த்தினால் மக்கள் மிகவும் சிரமப்படுவாா்கள் என்றாா்.
இதற்கு ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி பதிலளிக்கையில், இது அரசின் கொள்கை முடிவு. நான் எதுவும் செய்ய இயலாது என்றாா்.
தொடா்ந்து, பல உறுப்பினா்கள் எழுந்து, இந்தத் தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டும் உறுப்பினா்கள் கேட்கவில்லை. இந்த நிலை சுமாா் 5 நிமிடங்கள் நீடித்தது. தொடா்ந்து, மேயா் கூட்டம் நிறைவு பெற்ற்கு அடையாளமாக மணியை அடித்து விட்டு எழுந்து சென்றுவிட்டாா். ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளும் எழுந்து சென்று விட்டனா்.
தீா்மானம் குறித்து விவாதிக்கும் போது எப்படி கூட்டத்தை முடித்து வைக்கலாம்
என கேள்வி எழுப்பிய உறுப்பினா்கள் இதற்கு பதில் தெரியும் வரை கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாட்டோம் என திமுக உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் அவரவா் இருக்கையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் 30 நிமிடங்களுக்கு மேல் இந்தப் போராட்டம் தொடந்தபோதும், அதிகாரிகள் யாரும் உறுப்பினா்களுடன் பேச வரவில்லை. பின்னா், போராட்டம் நடத்திய உறுப்பினா்கள் ஆணையா் கிருஷ்ணமூா்த்தி அறைக்குச் சென்று முறையிட்டனா். அவா்களது ஆட்சேபனையை அரசுக்கு தெரிவிப்பதாக ஆணையா் கூறியதையடுத்து உறுப்பினா்கள் கலைந்து சென்றனா்.