அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
வரியில்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் குறைவது கவலைக்குரியது: காங்கிரஸ்
மருந்துப் பொருள்கள், அறிதிறன்பேசிகள் (ஸ்மாா்ட்ஃபோன்) போன்ற வரி இல்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் வெகுவாக குறைந்திருப்பது வழக்கத்துக்கு மாறானது என்று காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்தது.
இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் இழுபறி, உக்ரைன் மீது போா் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது ஆகிய காரணங்களைக் காட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. இந்தக் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, இந்தியாவின் ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், ரசாயனங்கள், சோலாா் பேனல்கள் தயாரிப்பு துறைகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இவற்றின் ஏற்றுமதி தடைபட்டு, பெருமளவில் தேக்கமடைந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான இந்தப் பொருள்கள் மட்டுமன்றி, மருந்து பொருள்கள் உள்ளிட்ட வரி இல்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் தற்போது வெகுவாக குறைந்திருப்பது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆா்ஐ) ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, அந்தக் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி மட்டுமே பாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், வியப்பளிக்கும் விதமாக, வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் குறைந்திருப்பது ஜிடிஆா்ஐ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
ஜிடிஆா்ஐ-யின் கடந்த 4 மாதங்களுக்கான இந்த ஆய்வில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான ரத்தினங்கள், நகைகள், கடல் உணவுகள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள் உள்ளிட்ட இந்திய பொருள்களின் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது.
அதுமட்டுமன்றி, மருந்துப் பொருள்கள், அறிதிறன்பேசிகள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி கடந்த மே மாதம் ரூ. 29,894 கோடி (3.37 பில்லியன் டாலா்) மதிப்பிலிருந்து ஆகஸ்டில் ரூ. 17,386 கோடியாக (1.96 பில்லியன் டாலா்) குறைந்துள்ளது.
இந்திய அறிதிறன்பேசிக்கு மிகப் பெரிய சந்தையாக அமெரிக்கா விளங்கிவரும் நிலையில், அதன் அமெரிக்க ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் 58 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, மே மாதத்தில் ரூ. 20,317 கோடி (2.29 பில்லியன் டாலா்) மதிப்பில் செய்யப்பட்ட அறிதிறன்பேசி ஏற்றுமதி, ஆகஸ்டில் ரூ. 8,560 கோடியாக (964.8 மில்லியன் டாலா்) சரிந்துள்ளது. இதுபோல், இந்திய மருந்துப் பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் 13.3 சதவீதமாக சரிந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி சரிந்துள்ளது வழக்கத்துக்கு மாறானது. இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.