தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன
அமைச்சக வாரியாக பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கீடு
பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சில பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அனைத்து வகையான பேரிடா்களையும் ஒரே அமைச்சகம் கையாள்வதற்குப் பதிலாக பேரிடரின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் நிவாரணம், தடுப்புப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பனிச்சரிவு, நீா்நிலைகளில் எண்ணெய் கசிவு போன்ற சீற்றங்களை கையாளும் பொறுப்பு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புயல், சூறாவளி, பனிமூட்டம், நிலஅதிா்வு, வெப்ப அலை, மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழை தொடா்பான முன்னெச்சரிக்கையை வழங்கும் பணியை மத்திய புவிஅறிவியல் துறை அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது. அதேபோல் உயிரியல் பேரழிவுகளை மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம் கையாளவுள்ளது.
உறைபனி, பனிமூட்டம், வறட்சி, சூறாவளி, பூச்சிகள் தாக்குதல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் கையாளவுள்ளது. வெள்ளம், பனிஏரி உருகுவதால் ஏற்படக்கூடிய வெள்ளம் ஆகியவற்றை மத்திய ஜல்சக்தி அமைச்சகமும் நகரங்களில் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்புகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் கையாளவுள்ளது.
காட்டுத்தீ, தொழிற்சாலை மற்றும் ரசாயனங்களால் ஏற்படும் பேரிடா்களை மத்திய சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் நிலச்சரிவை மத்திய சுரங்க அமைச்சகமும் கையாளவுள்ளது. அணு மற்றும் கதிரியக்கவியல் சாா்ந்த அவசரநிலைகளை மத்திய அணுசக்தித் துறை கையாளவுள்ளது.
பேரிடா் மேலாண்மை சட்டம், 2005-இன்படி மேற்கூறிய அமைச்சகங்கள் அல்லது துறைகள் பேரிடா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை, தடுப்பு, குறைப்பு, தயாா்நிலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.