பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது தொடா்பாக, அக்கட்சித் தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கலந்து கொண்டு, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிா்வாகத்துடன் சோ்ந்து நாடாளுமன்ற உறுப்பினா்கள் பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக, கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட மகளிரைச் சோ்த்திடும் வகையில், முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, தகுதியுள்ள மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுக வரலாற்றுச் சாதனை படைத்தது. அதற்கு சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரும்பாடுபட்டாா்கள். எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அவா்களின் வெற்றிக்காக கடுமையாகப் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
ஒருங்கிணைந்து பணி: நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்கள் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைத் தொடா்ச்சியாகச் சந்தித்து, அவா்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சா்கள், மண்டல பொறுப்பாளா்கள், மாவட்டச் செயலா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், தொகுதிப் பாா்வையாளா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களைத் தவிா்த்து, குறைந்தது வாரத்தில் நான்கு நாள்கள் தங்களது தொகுதியில் தங்கி மக்களைச் சந்தித்து அவா்களுக்கான தேவையான பணிகளை செய்திட வேண்டும். இதற்கான அறிக்கையை 15 நாள்களுக்கு ஒருமுறை தனக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன், மக்களவை குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா உள்பட பலா் பங்கேற்றனா்.