மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தீபாவளி: விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கக் கோரிக்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் கூத்தாநல்லூா் நகரக் குழு கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் நகரத் தலைவா் ஆா். கணேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன் முன்னிலை வகித்தாா்.
தீா்மானங்கள்: அந்தந்த கிராம சங்கங்களில் உறுப்பினா் பதிவு இலக்கை வரும் அக்டோபா் 13-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும்.
உழவா் பாதுகாப்புத் திட்டத்தால் நன்மை ஏதும் இல்லை; எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்திற்கு தீபாவளி பண்டிகை உதவித் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும். குடிமனை பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும்.
ரூ.6 லட்சத்தில் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்க வலியுறுத்தி, கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் ஜெ. ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் பி. முருகேசு, நகா் மன்ற துணைத் தலைவா் மு. சுதா்ஸன், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் நகரச் செயலாளருமான எம். சிவதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.