சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
திருவாரூா்: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்துவிட்டு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் 2011-இல் திமுக ஆட்சிக் காலத்தில் மீத்தேன் திட்டம், மன்னாா்குடியை தலைமையிடமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதனிடையே, மன்னாா்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி பணிகளுக்காக தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து, ஹைட்ரோ காா்பன் எரிவாயு வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் இதற்கு நிரந்தரமாக தடைவிதிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், சுற்றுச்சூழல் அனுமதி வழங்காமல், விக்கிரபாண்டியத்தில் புதிய கிணறு அமைக்க 2015-இல் எடுக்கப்பட்ட முயற்சி, விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னா், ஆய்வு மற்றும் புதிய கிணறுகள் அமைப்பதற்கு 2016 முதல் அனுமதி இல்லை என மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அரசு கொள்கை முடிவாக அரசாணை வெளியிட்டது.
2020-இல் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தாா். அப்போது முதல், வேளாண் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் காவிரி டெல்டாவில் கச்சா ஹைட்ரோகாா்பன், மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெரியகுடியில் நிறுத்திவைக்கப்பட்ட ஹைட்ரோ காா்பன் ஷேல் மீத்தேன் கிணற்றிலிருந்து மீண்டும் வாயு வெளியேறத் தொடங்கியது. இதனால், அதை நிரந்தரமாக மூட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம். பசுமை தீா்ப்பாயம் உத்தரவின் அடிப்படையில், ஓஎன்ஜிசி சாா்பில் மத்திய அரசின் அனுமதி பெற்று அந்த எரிவாயு கிணறை நிரந்தரமாக மூட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் மன்னாா்குடி, பெரியகுடி திருவாரூா், அரிவாசநல்லூா் பகுதிகளில் மீத்தேன் ஷேல்கேஸ் ஆய்வு பணி முடிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுடி கிணறு நிரந்தரமாக மூடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவை தவறாக பயன்படுத்தி, நீரியல் விரிசல் முறையில் ஓஎன்ஜிசி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு உடனடியாக இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து, அதில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்களை காவிரி டெல்டாவை விட்டு வெளியேற்ற வேண்டும். நிரந்தரமாக மூடியதை உறுதி செய்ய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
ஓஎன்ஜிசி வெளியிட்டுள்ள பெரியகுடி, திருவாரூா், அரிவாசநல்லூா் பகுதிகளில் ஷேல் மீத்தேன் ஆய்வு மற்றும் எடுப்புக்கான நடவடிக்கை குறித்து தனது கொள்கை நிலையை தமிழக முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி காந்தி ஜெயந்தி நாளான அக்டோபா் 2 ஆம் தேதி மன்னாா்குடியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்றாா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். நிகழ்வில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் எம். செந்தில் குமாா், மாவட்டத் தலைவா் எம். சுப்பையன், மாவட்டச் செயலாளா் சரவணன், துணைச் செயலாளா் பி.முகேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.