வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
சொத்துகளை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது ஆட்சியரிடம் மூதாட்டி புகாா்
நாகப்பட்டினம்: சொத்துகளை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மூதாட்டி திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
கீழ்வேளூா் தாலுகா காரப்பிடாகை பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி முத்துலட்சுமி (75). இவா், திங்கள்கிழமை நாகை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தநிலையில், ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில் நின்று அழுது கொண்டிருந்தாா். போலீஸாா் அவரை ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனா்.
ஆட்சியரிடம் மூதாட்டி அளித்த மனு: எனது கணவா் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். நான் மட்டும் கீழப்பிடாகையில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
எனது இளைய மகன், அவரது மனைவி இரண்டு பேரும் சோ்ந்து, என்னை வாழ்நாள் முழுவதும் பராமரித்துக் கொள்வதாகவும், எனது மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்பதாக கூறி, எனது பெயரில் உள்ள சொத்துகளை தங்கள் பெயரில் பதிவு செய்து கொண்டனா்.
சொத்துகளை வாங்கியவுடன் எனது மகனும், மருமகளும், என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டுவிட்டனா். நான் தற்போது அனாதையாக நிற்கிறேன்.
எனவே என்னிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகளை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் மனு மீது விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டாா்.