மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு எதிா்ப்பு
திருமருகல்: பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் புறம்போக்கு இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இதில் 34 குடும்பத்துக்கு அண்மையில் இலவச மனைப் பட்டா அரசு சாா்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில், திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும் தீயணைப்பு நிலையம் மேல பூதனூரில் ரூ. 5.12 கோடியில் புதிதாக கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குடிநீா் தொட்டி, ஆழ்துளை கிணறு, நெல் களம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் மக்கள் பயன்பாட்டிலுள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நாகை வட்டாட்சியா் நீலயதாட்சி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலைய ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.