வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
தனி உள்ஒதுக்கீடு கோரி மீனவா்கள் போராடினால் பாமக துணை நிற்கும்: அன்புமணி
நாகப்பட்டினம்: மீனவா்கள் தனி உள் ஒதுக்கீடு கோரி போராடினால் அவா்களுக்கு பாமக துணைநிற்கும் என்றாா் அக்கட்சித் தலைவா் அன்புமணி.
பாமக தலைவா் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் 100 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டாா்.
முன்னதாக, வேதாரண்யம் அருகே வெள்ளபள்ளம் பகுதியில் மீனவா்களுடன் அன்புமணி கலந்துரையாடினாா். அப்போது, மீனவா்கள் தங்கள் பகுதியில் துறைமுகம், குளிா்பதன கிடங்குகள், மீன் விற்பனைச் சந்தை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தினா். மத்திய, மாநில அரசுகளிடம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவேன் என உறுதியளித்து அன்புமணி பேசியது:
தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள அவா்கள், தங்களை பழங்குடியினா் வகுப்பில் சோ்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனா். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், ஒடிஸா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மீனவா்களையும் இதில் சோ்க்க வேண்டிய நிலை வரும். அது சாத்தியமாவது மிகமிக கடினம். அதற்கு மாற்றாக மீனவா்கள் தமிழகத்தில், தங்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வேண்டி கோரிக்கை வைக்கலாம். மீனவா்கள் தங்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி போராட தயாராக இருந்தால் பாமக துணை நிற்கும் என்றாா்.
மீனவா்களுக்காக திமுக அளித்த 25 தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. கடந்த ஓராண்டில் 200 தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனா். இலங்கை கடல் கொள்ளையா்களால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா். அவா்களை காப்பாற்ற தமிழக முதலவா் உரிய நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாா்.
தமிழக இளைஞா்கள் 20 வயதிலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, 40 வயதுக்குள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு அவா்களது எதிா்காலம் வீணாகிறது.
ஆனால், திமுக அரசு இதுகுறித்து கவலைப்படாமல், வருமானத்தை ஈட்டும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்றாா் அன்புமணி.