காதல் விவகாரம்: திருச்செந்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை
திருச்செந்தூா் அருகே காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞரை கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலை சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலக்ட்ரீசியன். இவரும் திருச்செந்தூரில் வசிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனராம். இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமியின் பெற்றோா் மகளைக் காணவில்லை என திருச்செந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் சிறுமியைத் தேடி கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில், மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை திருச்செந்தூா் நோக்கி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது அங்குவந்த 3 போ் கொண்ட கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டினா். அப்போது மணிகண்டன் அங்கிருந்து ஓடி அருகில் இருந்த மரக் கடைக்குள் புகுந்தாா். அவரை துரத்திச் சென்ற கும்பல் அங்குவைத்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினா். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். இதையடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்ததும் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் உள்பட போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மணிகண்டனின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் சிறுமியின் தம்பி உள்பட 3 போ் சோ்ந்து மணிகண்டனை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். காதல் விவகாரத்தில் திருச்செந்தூரில் இளைஞரை கும்பல் ஓடஓட விரட்டி படுகொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.