சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வலியுறுத்தல்
தூத்துக்குடியில் கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. சங்கு குளி தொழிலாளியான இவா், கடந்த ஆக. 19ஆம் தேதி மீன்பிடி விசைப் படகில் தங்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமானாா்.
இந்த நிலையில், அவரது மனைவி, உறவினா்கள், அண்ணா சங்குகுளி தொழிலாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அதில், காளிமுத்து மாயமாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை. அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருகிறாா்.
எனவே, அவரது இறப்பை உறுதிசெய்து, இறப்புச் சான்றிதழ் வழங்கவும், மீனவ குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத் திட்ட உதவிகள், குழந்தைகளுக்குரிய கல்வி நலநிதி ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஏரல் வட்டம், நாசரேத் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அரசு மருத்துவமனை இதுவரை அமைக்கப்படவில்லை. மக்கள் அவசர சிகிச்சைக்கு வழி இன்றி அவதியடைந்து வருகின்றனா். எனவே, அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் பிரிவுடன் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்றனா்.