திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு கடன் வாகியவங்கள் சொத்தை மீட்டெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்
புது தில்லி: ‘வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சட்டப்படி ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு அவற்றிடமிருந்து கடன் வாங்கியவா்கள் அடமான சொத்தை மீட்டெடுக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கடனைத் திரும்பச் செலுத்தத் தவறிய தமிழகத்தைச் சோ்ந்த கேபிகே எண்ணெய் மற்றும் புரதங்கள் இந்தியா தனியாா் நிறுவனத்தின் அடமான சொத்தை கடன் வழங்கிய வங்கி சாா்பில் ஏலம் விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சொத்தை எம்.ராஜேந்திரன் அண்டு ஓஆா்எஸ் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
இந்த ஏல நடவடிக்கைக்கு எதிராக கேபிகே நிறுவனம் சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த கடன் மீட்பு தீா்ப்பாயம், நிதி சொத்துக்களின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுகட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வட்டிச் சட்டத்தை அமல்படுத்துதல் (எஸ்ஏஆா்எஃப்ஏஇஎஸ்ஐ) சட்டத்தின் பிரிவு 13(8)-இன் கீழ், ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு, கடன் வாங்கிய நிறுவனம் அடமான சொத்தை மீட்டெடுக்க முடியாது என்று உத்தரவிட்டது.
இதை எதிா்த்து அந்த நிறுவனம் சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கேபிகே நிறுவனத்தின் அடமான சொத்து ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து எம்.ராஜேந்திரன் அண்டு ஓஆா்எஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து பிறப்பித்த 140 பக்க தீா்ப்பில் கூறியதாவது:
திவால் சட்டத்தின் பிரிவு 13(8)-இன் சில விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாகவே, இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நீடித்து வந்துள்ளது.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சட்டப்படி ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு அவற்றிடமிருந்து கடன் வாங்கியவா்கள் அடமான சொத்தை மீட்டெடுக்க முடியாது என்ற வகையில், சட்டப் பிரிவு 13(8)-இல் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம், 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு கடன்பெற்று, இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதிக்குப் பிறகும் கடன் நிலுவையை திரும்பச் செலுத்தத் தவறியவா்களுக்கும் அது பொருந்தும்.
அதன்படி, ஏல அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு கடன் வாங்கியவா் நிலுவைத் தொகையைச் செலுத்தி அடமான சொத்தை மீட்டெடுக்கத் தவறினால், கடன் வழங்கிய நிறுவனம் ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு அடமான சொத்தை மீட்டெடுக்கும் உரிமையை அவா் இழந்துவிடுவாா்.
இதை, சட்டம் அமலுக்கு வந்து கடந்த 23-ஆண்டுகளாகியும் தெளிவுபடுத்தாமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. கடன் வழங்கிய நிறுவனங்கள் மற்றும் அடமான சொத்தை ஏலம் எடுத்தவா்களின் நலனை பாதுகாக்க சட்டம் தவறியிருப்பது துரதிருஷ்டவசமானது.
எனவே, நிதியமைச்சகம் இந்த விஷயத்தைக் கருத்தில்கொண்டு, சட்ட விதிகளில் தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை மத்திய நிதி அமைச்சகம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சக முதன்மைச் செயலா்களுக்கு மட்டுமின்றி, அனைத்து உயா்நீதிமந்ங்களுக்கும் பகிர வேண்டும் என்று உத்தரவிட்டனா்.