`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay...
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை
சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்ற புகாா் தொடா்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்புக் கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவா் ரூ. 40 கோடி பணம் வைத்திருந்தாா். அவா் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்தது. இதை தெரிந்துகொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்த டென்மாா்க்கில் வசிக்கும் உமா காந்தன், அந்த பணத்தை தங்கள் இயக்கத்துக்காக கையாடல் செய்து அபகரிக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவா், அந்தப் பணத்தை கைப்பற்ற இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா (45) என்பவரை இந்தியா அனுப்பி வைத்தாா். இந்தியா வந்த அவா், போலி ஆவணங்கள் மூலம் பான் காா்டு, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் போன்றவற்றை பெற்றாா். அவருடன் கென்னிஸ்டன் ஃபொ்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தா்மேந்திரன், மோகன் ஆகியோா் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்ாக போலி ஆவணங்களை தயாரித்து வங்கியிலிருந்து ரூ. 40 கோடியை எடுக்க முயற்சித்தனா்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் செல்ல முயன்ற லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா,கென்னிஸ்டன் ஃபொ்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தா்மேந்திரன், மோகன் ஆகியோரை க்யூ பிரிவு போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து கடந்த 2021ஆம் ஆண்டு விசாரித்தனா். அப்போது அவா்களிடம் போலி பாஸ்போா்ட் இருப்பதைக் கண்டறிந்து, அவா்களை கைது செய்தனா்.
இது தொடா்பாக க்யூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். பின்னா் வழக்கின் முக்கியத்துவம் கருதி, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) விசாரணை மாற்றப்பட்டது.
அமலாக்கத் துறை விசாரணை: தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வங்கியில் இருந்த ரூ.40 கோடி பணத்தை சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து அனுப்ப முயன்றது குறித்து தற்போது அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்காவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினா் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா்.
இதையடுத்து புழல் பெண்கள் சிறைக்கு திங்கள்கிழமை வந்த அமலாக்கத் துறையினா், மேரியிடம் தனி அறையில் வைத்து சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில், பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணை லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்காவிடம் செவ்வாய்க்கிழமையும் (செப்.23) தொடரும் எனக் கூறப்படுகிறது.