செய்திகள் :

ஏா் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை கோரும் மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

post image

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான, நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்துக்கு இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

டாடா குழுமத்தின் ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் (ஏஐ 171) ரக விமானம், வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் புறப்பட்டது.

சில விநாடிகளிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் இருந்து தப்பிய ஒரே பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவா்களுடன் சோ்த்து மொத்தம் 260 போ் இந்த விபத்தில் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி), தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியிட்டது.

அதில், ‘விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில விநாடிகளில் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் ஒரு விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து ‘கட்-ஆஃப்’ நிலைக்குச் சென்றுவிட்டன. அவசர சூழ்நிலைகளின்போது இந்த இரண்டு சுவிட்சுகள்தான் என்ஜின்களை நிறுத்தும் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருள் விநியோகம் நின்றதும், இரண்டு என்ஜின்களும் படிப்படியாகச் செயல்பாட்டை இழந்துள்ளன. இதனால், விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குள் விபத்துக்குள்ளாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விமான விபத்து தொடா்பாக விமான கேப்டன் அமித் சிங் தலைமையில் இயங்கும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘விமான விபத்து குறித்த முதல் கட்ட அறிக்கையானது குடிமக்களின் உயிா் வாழ்தல், சமத்துவம் மற்றும் உண்மைத் தகவலைப் பெறுவது உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. முழுமையான எண்ம விமான தரவு பதிவு (டிஎஃப்டிஆா்) தகவல்கள், விமானி அறை குரல் பதிவு (சிவிஆா்) முழு மொழிபெயா்ப்பு தகவல்கள், மின்னணு கோளாறு பதிவு (இஏஎஃப்ஆா்) தரவு தகவல்கள் உள்ளிட்டவை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடப்படவில்லை. இந்தத் தகவல்களை முழுமையாக வெளியிட உத்தரவிடுவதோடு, விமான விபத்து குறித்து சுதந்திரமான, நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், என். கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘விமான விபத்து குறித்த விசாரணைக் குழுவில் டிஜிசிஏ-விலிருந்து மூவா் இடம்பெற்றது விசாரணை அறிக்கை ஒரு சாா்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விபத்து குறித்த சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், விமான விபத்து குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், விமான தரவு பதிவு தகவல்களை முழுமையாக வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘விமான பதிவு தரவுகளை முழுமையாக வெளியிடுவதில், தன் மறைப்பு உரிமை, ரகசியத்தன்மை மற்றும் கண்ணியம் உள்ளிட்ட விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், அகமதாபாத் விமான விபத்து குறித்த இறுதி அறிக்கை இன்னும் வரவேண்டியுள்ளது. எனவே, இந்த விமான விபத்து குறித்து சுதந்திரமான, நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சத்துக்கு மட்டும்தான் பதில் தர உத்தரவிட முடியும்’ என்று குறிப்பிட்டு, அதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்துக்கு இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின்னணு நிா்வாகக் கரு... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

‘கேரளத்தில் இரண்டு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து முதல்வா் பினராயி விஜயனை நீக்கக் கோரும் மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீத... மேலும் பார்க்க

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் (என்எல்சிஎன் -கே) தீவிரவாத அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்... மேலும் பார்க்க

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குள... மேலும் பார்க்க

சிக்கலான வளா்ச்சிப் பணிகளைக் கைவிட்டுவிடுவது காங்கிரஸ் இயல்பு: பிரதமா் மோடி

இடாநகா்: ‘மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு; இந்த இயல்புதான் அருணாசல பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் ... மேலும் பார்க்க

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

2023-ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க