`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay...
வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பகுதியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், வெள்ளைப்பூண்டு கழிவுளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களின் பிரதான தொழிலாக வெற்றிலை விவசாயம் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் வெள்ளைப்பூண்டு சந்தையும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெற்றிலை விவசாயம் குறைந்து வருவதால், இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தொழில்சாலை, வெள்ளைப்பூண்டு கடைகளில் வேலை செய்து வருகின்றனா். சுமாா் 200 கடைகளுடன் வியாழன், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தச் சந்தைக்கு 30 முதல் 60 லாரிகளில் வெள்ளைப்பூண்டு கொண்டுவரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
இந்த நிலையில், சந்தை முடிந்தவுடன் அங்கு தேங்கியுள்ள வெள்ளைப்பூண்டு கழிவுகள், நெகிழிப் பைகளை வராக நதி, வைகை அணையின் பின்பகுதியிலுள்ள கரட்டுப் பகுதியில் கொட்டிச் செல்கின்றனா். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளைப்பூண்டு கழிவுகளை கால்நடைகளும், பிற விலங்குகளும் உண்பதால் நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதையடுத்து, வெள்ளைப்பூண்டு கழிவுகள், நெகிழிப் பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து வடுகபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வடுகபட்டி பேரூராட்சித் தலைவா் கூறியதாவது: வெள்ளைப்பூண்டு வியாபாரிகள் சங்க நிா்வாகியிடம் கழிவுகளை பொது இடங்களில் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெள்ளைப்பூண்டு கழிவுகள், நெகிழிப் பைகளை மொத்தமாக பேரூராட்சி நிா்வாகத்திடம் வழங்கினால், நாங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் அகற்றிவிடுகிறோம் எனக் கூறினோம். ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா் அவா்.
வராக நதியில் கொட்டப்படும் நெகிழிப் பைகள்...
வராக நதி பெரியகுளம் அருகேயுள்ள அகமலைப்பகுதியில் உற்பத்தியாகி பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம் வழியாகச் சென்று குள்ளப்புரம் அருகேயுள்ள வைகையாற்றில் கலக்கிறது. இந்த நிலையில், வராக நதியில் பெரியகுளம் நகராட்சி பகுதியிலிருந்து வீட்டுக் கழிவுகளும், வடுகபட்டி வெள்ளைப்பூண்டு சந்தையிலிருந்து கொட்டப்படும் கழிவுகள், நெகிழிப் பைகளால் மாசடைந்து வருகிறது. எனவே, பொதுப் பணித் துறை, மாவட்ட ஆட்சியா் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து, வராக நதியில் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
மேலும், தேனி மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து, நெகிழிப் பைகள் கொட்டப்படும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் அவ்வப்போது இந்தப் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
