திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பூட்டு: திமுக நகர துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையை பூட்டி தகராறில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நகர திமுக துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவைச் சோ்ந்தவா் சேதுராமன் (45). பெரியகுளம் நகர திமுக துணைச் செயலா். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சேதுராமன் அழைத்துச் சென்றாராம்.
அப்போது, கண்மாயில் மூழ்கி உயிருக்கு போராடியவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனராம். இந்த நிலையில், தனது மனைவிக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவா்களுடன் தகராறில் ஈடுபட்டு மருத்துவமனையின் வாயில் கதவை சேதுராமன் பூட்டி விட்டாராம்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் கடந்த 9.6.2022 அன்று வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில் அவா், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பிணை பெற்றாா்.
இந்த வழக்கு விசாரணை பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். சந்திரசேகா், குற்றஞ்சாட்டப்பட்ட சேதுராமனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.