தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி விற்றதாக இருவா் கைது
போடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி ஊரக காவல் நிலைய போலீஸாா் சிலமலை கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னக்காளை மகன் கனகராஜன் (57) வீட்டில் 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கனகராஜனை கைது செய்தனா்.
இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி சுப்புராஜ்நகா் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சரவணன் (42) தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனா்.