"ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்' சாமானிய மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை: ஆம் ஆத்மி விமர்சனம்
நமது நிருபர்
ஜிஎஸ்டி புதிய வரி அமைப்பு முறையானது பணக்காரர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் சாமானிய மக்கள் மீது அதிக சுமையை சுமத்துவதாகவும் உள்ளது என்று ஆம் ஆத்மி செவ்வாய்க்கிழமை விமர்சித்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் "ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்' அறிவிப்பைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இவ்வாறு விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி "பச்சத் உத்சவ்' அறிவித்துள்ளார். மக்கள் உண்மையை மறந்து விடுகிறார்கள். பிரதமர் இதுபோன்ற ஒன்றை அறிவிக்கும்போதெல்லாம், அது சாமானிய மக்களின் நலனுக்கானது அல்ல. இதற்கு ஒரு நல்ல உதாரணம் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைதான். அந்த நடவடிக்கைக்கைக்குப் பிறகு, வரிசையில் காத்திருந்தபோது அந்தக் கொண்டாட்டங்களில் 100 பேர் தங்கள் உயிரை இழந்தனர்.
கடந்த 8 ஆண்டுகளில், ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் மூலம் மத்திய அரசு ரூ.127 லட்சம் கோடியை வசூலித்துள்ளது. இதில், 64 சதவீத சுமை 50 சதவீத மக்கள் மீது விழுகிறது. மேல்தட்டு 10 சதவீத பணக்காரர்களிடமிருந்து மூன்று சதவீதம் மட்டுமே வரி வசூல் வந்துள்ளது.
இது பச்சத் (சேமிப்பு) உத்சவம் அல்ல; இது ஒரு சபத் (ஏமாற்றும்) உத்சவம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை 3 கோடி சிறு தொழில்களை மூடுவதற்கு வழிவகுத்தது. தற்போது சுதேசி குறித்து அரசு பேசி வருகிறது.
நவராத்திரியின் முதல் நாளில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை, பொருள் வாங்குபவர்களுக்கான பச்சத் உத்சவம் என்று பிரதமர் விவரித்தார். இது பல்வேறு வகையான பொருள்களின் விலைகளைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றபோது வர்த்தகர்களுடனான தனது உரையாடலின் விடியோவைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, இந்த மாற்றம் நாட்டில் வளர்ந்து வரும் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறியிருந்தார்.
திருத்தப்பட்ட இரண்டு அடுக்கு ஜிஎஸ்டியின் கீழ், பெரும்பாலான பொருள்கள் மற்றும் சேவைகள் இப்போது 5 சதவீதம் அல்லது 18 சதவீத வரிக்குள் வருகின்றன. அதே நேரத்தில் அதிக ஆடம்பர பொருள்கள் 40 சதவீத வரிப் பிரிவிலும் புகையிலை பொருள்கள் 28 சதவீதம் மற்றும் செஸ் விகிதத்திலும் உள்ளன.