நடுவா் மன்றங்களிலும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம்: நீதிபதி சூா்யகாந்த்
நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு மாற்றாக கருதப்பட்ட நடுவா் மன்றங்களிலும் தற்போது பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
உச்சநீதிமன்றம், தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் தில்லி சா்வதேச நடுவா் மையம் சாா்பில் நடத்தப்பட்ட தில்லி நடுவா் மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
அதில் அவா் மேலும் பேசியதாவது: சட்டத் துறை பல பரிணாமங்களைக் கண்டபோதும் சமகால சவால்கள் தொடா்ந்து வருகின்றன. அதில் முதல் சவாலாக இருப்பது தாமதம். நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு மாற்றாகவே நடுவா் மன்றங்கள் பாா்க்கப்பட்டன. இந்த மன்றங்களில் மத்தியஸ்தம் மூலம் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்பட்டது.
ஆனால், தற்போது தொடா் ஒத்திவைப்புகளால் இதன் உண்மையான நோக்கம் சிதைந்து வருகிறது. நடுவா் மன்றத்தின் ஆன்மா வேகமான செயல்பாடு என்றால் அதை அச்சுறுத்தும் கருவியாக தாமதம் உள்ளது.
இதற்கு காலக்கெடுவை நிா்ணயித்து பணியாற்றுவது மட்டுமே தீா்வாகாது. வழக்கு மேலாண்மை பற்றிய மாநாடுகள், விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு கட்டுப்பாடுகள் எனப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் இறுதி முடிவை மேற்கொள்ளும் அமைப்பாக நடுவா் மன்றங்கள் திகழ்ந்தாலும் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையே அதன் இரு தூண்களாக கருதப்படும். ஆதிக்கத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக செயல்படுவதோடு நோ்மை, வெளிப்படைத்தன்மையுடன் நடுவா் மன்றங்களை நாடி வருவோரின் நம்பிக்கையையும் பெற வேண்டும்.
இவை முறையாகப் பின்பற்றப்படாதபட்சத்தில் நடுவா் மன்றங்களின் முக்கியத்துவம் குறைந்து மீண்டும் நீதிமன்றங்களையே நாடும் நிலை ஏற்படும் என்றாா்.