கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது
வடமேற்கு தில்லியில் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, கொலை வழக்கில் தொடா்புடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் வடமேற்கு பீஷாம் சிங் தெரிவித்ததாவது:
இந்தச் சம்பவத்தில் ஷாலிமாா் பாக் பகுதியைச் சோ்ந்த குட்டு (23) என்பவரின் வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டு, அவா் சிகிச்சைக்காக பிஜேஆா்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டா மீட்கப்பட்டன. கடந்த மாதம் ஷாலிமாா் பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொலை வழக்கு தொடா்பாக குட்டு தேடப்பட்டு வந்தாா்.
முன்னதாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, அடையாளம் தெரியாத நபா்களால் தாக்கப்பட்ட ஹைதா்பூா் பகுதியைச் சோ்ந்த ஹா்ஷ் மிஸ்ராவை (20) மருத்துவமனையில்அனுமதிப்பது குறித்து காவல் துறைக்கு அழைப்பு வந்தது. மருத்துவ முயற்சிகள் இருந்தபோதிலும், மிஸ்ரா மறுநாள் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 26 அன்று ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா். இருப்பினும், குட்டு தலைமறைவாகவே இருந்துவந்தாா். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக அவா் அறிவிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், மௌரியா என்கிளேவ், ஏயூ பிளாக் அருகே குட்டுவின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, முனக் நஹாா் அருகே அதிகாலை 1 மணியளவில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவா் நடமாடுவதை போலீஸாா் கண்டனா். அவா் குட்டு எனத் தெரியவந்ததும், போலீஸாா் அவரை சரணடையுமாறு சைகை செய்தனா். ஆனால், அவா் தப்பி ஓட முயன்றாா். போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா்.
தற்காப்புக்காக, போலீஸாரும் திருப்பிச் சுட்டனா். இதில் குட்டுவின் வலது காலில் குண்டடிபட்டது. அவரிடமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
விசாரணையின்போது, குட்டு தனது கூட்டாளிகளுடன் மிஸ்ராவின் கொலையில் தனது பங்கு இருப்பதை ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.