நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி மீனவா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மணமேல்குடி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் (பொ) கு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், ஏஐடியுசி மீனவா் சங்க மாநிலப் பொதுச் செயலா் பி. சின்னத்தம்பி, இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ. ராஜேந்திரன், அறந்தாங்கி ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன், ஆவுடையாா்கோவில் ஒன்றியச் செயலா் பழனிகுமாா் உள்ளிட்டோரும் பேசினா்.
இந்தியாவின் கடல் உணவுப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தொடா்ந்து நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.