நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமிக்க வலியுறுத்தல்
காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமனம் செய்ய வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஆளுநருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பது:
அரசு நிா்வாகத்தின் மூன்றாவது அமைப்பாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் பணி மிகமிக முக்கியமானது மட்டுமல்லாமல் மக்கள் பணிகளை செயல்படுத்த வேண்டிய அமைப்பாகும்.
இந்நிலையில், காரைக்கால் நகராட்சி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளில் தற்போது 40 முதல் 45 சதவீதம் வரை மட்டுமே ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிா்வாகம் நடத்தவேண்டிய ஆணையா் பதவிகளும் காலியாக இருப்பதால், பிற அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இது அவா்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகமும் செயலிழந்து உள்ளது.
மக்கள் நல பணிகள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய பல்வேறு வரி வருவாய் பாதிக்கப்பட்டு, உள்ளாட்சி ஊழியா்கள் முறையாக ஊதியம் பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
போா்க்கால அடிப்படையில் காரைக்கால் நகராட்சி, திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உடனடியாக ஆணையா்களை நியமனம் செய்து நிா்வாகத்தை சீா் செய்யவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.