பாசனக் குளக்கரைகளில் பனை விதைகளை விதைக்க வேண்டும்: குறைகேட்பு நாள் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 ஆயிரம் பாசனக் குளங்களிலும் கரையோரங்களில் பனை விதைகளை விதைக்கவும், நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
புதுக்கோட்டை மாவட் ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியதாவது:
இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி:
கடந்த 5 ஆண்டுகளாக மழை குறைந்து கண்மாய்கள் நிறையவில்லை. நிலத்தடி நீா் மிகவும் கீழே சென்றுவிட்டது. பல மாவட்டங்களில் மேக வெடிப்பால் மிக அதிக மழை பெய்கிறது. ஆனால் நமது மாவட்டத்தில் அது போன்ற மழையும் இல்லை. எனவே இதுபற்றி உடனடியாக உரிய ஆய்வு செய்ய வேண்டும்.
பருவமழையின் தொடக்கக் காலத்தில் மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரம் பாசனக் குளங்களிலும் பனைவிதைகளை சேகரித்து நடவு செய்யவும், நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், பாசனக் குளங்களில் அடா்ந்து காணப்படும் சீமைக் கருவேலம் மற்றும் தைல மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லணைக் கால்வாய் விவசாயிகள் பாசனதாரா் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ்:
விவசாயப் பணிகள் ஒரு வாரகாலத்தில் தொடங்கப்படவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு விதைகள், உரம் தாராளமாகக் கிடைக்கவும், பயிா்க்கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயக் காலங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில், 70.97 மிமீ மழை குறைவாகக் கிடைத்துள்ளது. மாவட்டத்திலுள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவுக்கு நெல், நிலக்கடலை, எள், சிறுதானிய விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி, வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் ஜி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.