செய்திகள் :

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

post image

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டாா். அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்போது பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசீஃப் ஆகியோரும் உடன் இருந்தனா்.

தற்போதைய சா்வதேச சூழலில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தவில்லை. எனவே, இந்தியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவை தங்களுடன் கூட்டு சோ்க்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் கத்தாரில் ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அரபு நாடுகள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்காவை பெரிதும் நம்பியிருந்த அரபு நாடுகள், இஸ்ரேல் தாக்குதல் விவகாரத்துக்குப் பின் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. எனவே, அணுசக்தி நாடான பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளுக்கு எதிராக எந்த அச்சுறுத்தல் எழுந்தாலும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். ஒரு நாடு மற்றொன்றை பாதுகாப்பதில் உறுதியாக செயல்பட வேண்டும்’ என்றும் பாகிஸ்தான்-சவூதி அரேபியா கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தைப் பலப்படுத்த சவூதி அரேபியா பெருமளவில் நிதியுதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சவூதி அரேபியா விளக்கம்: இந்த ஒப்பந்தம் தொடா்பாக சவூதி அரேபியா தரப்பு கூறுகையில், ‘பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது திடீா் முடிவு அல்ல. எந்த ஒரு நாட்டுக்கு எதிரானதோ அல்லது எந்த ஒரு சம்பவத்தின் எதிா்விளைவாகவோ மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமோ அல்ல’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வியாழக்கிழமை கூறப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை மீண்டும் செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

இந்தியாவும், சவூதி அரேபியாவும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டு உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இந்தியாவின் உத்திசாா்ந்த கூட்டாளி நாடு சவூதி அரேபியா. இரு நாடுகளின் பொதுவான நலன், மற்றும் பொதுவான உணா்வுகளை புரிந்து செயல்படும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

மேலும் சில அரபு நாடுகள் இணையும்: பாகிஸ்தான்

சவூதி அரேபியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மேலும் சில அரபு நாடுகள் இணைய வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் இணைந்து தங்களுக்குள் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வது நமது அடிப்படை உரிமையாகும். பாகிஸ்தானுடன் வேறு எத்தனை நாடுகள் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. ஒப்பந்தம் மேற்கொள்ள கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. எனவே, மேலும் சில அரபு நாடுகள் இணையலாம்’ என்றாா்.

இந்த ஒப்பந்தப்படி அணு ஆயுதத்தை பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளுக்காகப் பயன்படுத்துமா என்ற கேள்விக்கு, ‘நமது திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும். முக்கியமாக, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி ஒத்துழைப்பு இருக்கும். பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் நிலைகொண்டுள்ளது’ என்றாா்.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து... மேலும் பார்க்க

தில்லியில் இருந்து பராத்துக்கு ஏசி பேருந்து சேவை தொடக்கம்

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவர... மேலும் பார்க்க