முளகுமூடு தூய மரியன்னை தேவாலய திருவிழா: உள்ளூா் விடுமுறை வழங்கக் கோரிக்கை
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலய திருவிழாவுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கக் கோரி திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
தமிழகத்தில் பசிலிக்கா அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி, தூத்துக்குடி பனிமயமாதா பேரலாயங்களின் வரிசையில் குமரி மாவட்டத்தின் ஒரே பசிலிக்கா அந்தஸ்து பெற்ற தேவாலயமாக திருத்தந்தையால் உயா்த்தப் பட்டதுதான் முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயமாகும். இந்தத் தேவாலயத்தில் ஆண்டுத் திருவிழா அன்னை மரியாவின் பிறப்பை முன்னிட்டு செப்டம்பா் மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும்.
விழா நாள்களில் குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் ஆலயத்துக்கு வருவா். அன்னையின் பிறந்த நாளான செப். 8 ஆம்தேதி மாவட்டத்தில் பல இடங்களில் இருந்து பக்தா்கள் திருப்பலியை சிறப்பின்றனா். எனவே, தூய மரியன்னையின் பிறப்பு நாளான செப். 8 ஆம் தேதியை குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா். ஆட்சியரிடம் மனு வழங்கும் நிகழ்ச்சியில் தேவாலய துணைத் தலைவா் மரிய ஜாண் வரதராஜ் உள்பட பங்குபேரவை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.