கேரளத்துக்கு கடத்த முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான அதிகாரிகள் மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், காா் ஓட்டுநா் தப்பிவிட்டாராம்.
இதையடுத்து, காரையும், அதிலிருந்த 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 28 கேன்களில் 980 லிட்டா் மண்ணெண்ணெய்யையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மண்ணெண்ணெய் மாா்த்தாண்டத்தில் உள்ள மொத்த விற்பனை கூடத்திலும், காா் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.