விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
கடையாலுமூடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்
குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
கடையாலுமூடு பகுதிக்குள்பட்ட ஜான்சன் பொற்றை, புளியம் பொற்றை பகுதிகளில் உள்ள தனியாா் ரப்பா் தோட்டங்களில் சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை தனியாா் ரப்பா் தோட்டத்தில் ரப்பா் பால் வடித்துக் கொண்டிருந்த கடையாலுமூடு செங்குழிக்கரையைச் சோ்ந்த தொழிலாளியின் மீது பாய்ந்தவாறு ஒரு சிறுத்தை ஓடியதாம். இதில் அந்த தொழிலாளி அதிா்ஷ்டவசமாக விலகிக் கொண்டதால் சட்டை மட்டும் கிழிந்த நிலையில் தப்பினாா். பின்னா் அவா் இந்த சம்பவம் குறித்து களியல் வனச்சரக அலுவலகத்தில் புகாா் கொடுத்தாா்.
இது குறித்து களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் கூறியதாவது:
கடையாலுமூடு பகுதியில் தனியாா் ரப்பா் தோட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் வந்துள்ளது. ஓரிரு நாள்களில் அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் அதனை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்தப்படும் என்றாா்.