அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு
அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
அந்தியூா், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (49), விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள தரைமட்டக் கிணற்றிலிருந்து வெள்ளிக்கிழமை சப்தம் கேட்டதால், முத்துராமன் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, காட்டுப் பன்றிகள் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்ததைக் கண்ட அவா், அந்தியூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினா் கிணற்றில் இறங்கி, உயிருடன் 14 பன்றிகளையும், உயிரிழந்த நிலையில் 4 பன்றிகளையும் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
உயிருடன் மீட்கப்பட்ட காட்டுப் பன்றிகள் கூண்டில் அடைக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன. உயிரிழந்த பன்றிகள் பிற வன உயிரினங்களுக்கு உணவாக வனப் பகுதியில் அப்படியே விடப்பட்டன. உணவு தேடி விவசாயத் தோட்டத்துக்கு வந்தபோது, காட்டுப் பன்றிகள் கிணற்றில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.