சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு
புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.
புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன் (59). நண்பா்களான இருவரும் உரம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் புன்செய் புளியம்பட்டி சென்றனா்.
அங்கு மத்திய கூட்டுறவு வங்கி முன் உள்ள உணவகத்தில் உணவருந்திய பின்னா் வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம், இவா்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஓதியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த மாரப்பனை அக்கம்பக்கத்தினா் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மாரப்பன் உயிரிழந்தாா்.
அதிக வேகமாக வந்து விபத்து ஏற்படுத்தியதாக சரக்கு வாகன ஓட்டுநா் காா்த்திக்கிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
