Vijay TVK: பல்வேறு நிபந்தனைகளுடன் நாகை, திருவாரூரில் இன்று விஜய் பரப்புரை!
Robo Shankar: ``பேரனுக்கு மொட்டை அடிக்கப் போறேன், நீங்க கண்டிப்பாக வரணும்னு சொன்னார்!'' - எழில்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை வருத்தமுறச் செய்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் அவரின் இழப்பு அத்தனை பேரையும் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ரோபோவை `தீபாவளி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் மேற்கொண்டு அவரை `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புகழ் பெறச் செய்தவருமான இயக்குநர் எழில் அவர்களிடம் பேசினோம்.
ரோபோவுக்கு புகழஞ்சலி செலுத்திவிட்டு வந்தவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
தீபாவளி படத்தில் தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அவரது தனித்துவமான காமெடியால் என்னை கவர்ந்தார். ஒரு சாதாரண காட்சிக்கு கூட ரொம்பவும் மெனக்கெடுவார்.
தீபாவளி படம் முடிந்த பிறகு கொஞ்ச நாட்கள் படம் செய்யாமல் இருந்தேன். அவரே எனக்கு ப்ரொடியூசரை கூட்டிக்கொண்டு வருகிற அளவுக்கு என்மேல் அவருக்கு அன்பு இருந்தது.
மனங்கொத்தி பறவை பண்ணும் போது என் வீட்டிற்கு அருகில் தான் குடியிருந்தார். அடிக்கடி வந்துவிடுவார், எவ்வளவு வேலை நெருக்கடி இருந்தாலும் அவரோடு சிரித்துப் பேசினால் துயர் விட்டுப் போகும்.
உனக்கு சரியான ரோல் வரும்போது கண்டிப்பாக கூப்பிடுவேன் என்று சொல்லி இருந்தேன். அப்பொழுதுதான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ஒரு எம்எல்ஏ கேரக்டரில் நடிக்க வைத்தேன்.
தனித்துவமான காமெடி
எல்லோரும் 6 மணி காமெடி பற்றி பேசுவார்கள் அதைப்பற்றி தனியே பேசலாம்.
அதற்கு முன் பஞ்சுமிட்டாய் விற்றுக்கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள் குழந்தைகள் பஞ்சு மிட்டாயைப் பார்த்தால் சந்தோஷத்தில் தொடையைத் தட்டிக்கொண்டு குதிப்பார்கள்.
நான், அவர் மேற்கொண்டு குழந்தைகள் மாதிரி தொடையைத் தட்டிக்கொண்டு குதித்து குதித்து ஓடுவார். குழந்தைகளின் மனநிலையை அற்புதமாகக் கொண்டு வந்திருப்பார்.
மானிட்டரில் பார்த்துக்கொண்டே இருந்தபோது வெடித்துச் சிரித்ததில் கட் சொல்ல மறந்துவிட்டேன்.

மொத்த யூனிட்டும் சிரித்த சிரிப்பு இப்ப நினைத்துப் பார்த்தால் அப்படியே மனசுக்குள் வருகிறது. அப்படிப்பட்ட நகைச்சுவையாளரை இழந்து விட்டோமே என்று தாங்க முடியவில்லை.
சரி என்று ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எங்கும் பேசப்பட்ட 6 மணி காமெடி பண்ணும் போது அவர் சொன்ன நிறைய ஐடியாக்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன.
தன் போர்ஷன் மட்டும் சிறப்பாக இருந்தால் போதாது என உணர்ந்து மற்றவர்கள் காமெடியிலும் தன் யோசனைகளை அழகாகச் சொல்வார்.
அவர் அந்தக் காமெடியில் மெருகேற்றிய இடங்கள்தான் இன்றும் ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கின்றன. அந்தக் காமெடி நான்கு பகுதிகளாக இருக்கும். ரவி மரியாவின் பதட்டத்தை ஒட்டி அது மெருகேறும்.
காமெடியில் தமிழ் சினிமாவில் தான் நிறைய நடிகர்கள் இருக்காங்க . மற்ற மொழிகளில் அவ்வளவாக இல்லை. அந்த வகையில் தனித்து தன் ஸ்டைலில் காமெடியில் கலக்கிய ரோபோவின் மறைவை கேட்டதும் பகீர் என்கிறது.
நான் கதை எழுதும் போது ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டிரண்டு பேரை மனதில் வைத்திருப்பேன். ஆனால் ரோபோ செய்யும் கேரக்டருக்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் யோசிக்க முடியாது.
இதற்கு முன்னால் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது உடம்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி கண்டித்தேன்.

பிறகு உடல் நலம் தேறி வந்ததும் எனக்கு போன் பண்ணி அண்ணே எல்லோரும் அவ்வளவுதான்னு முடிவு பண்ணிட்டாங்க. எமனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்துவிட்டு திரும்ப வந்திட்டேன்.
உங்களையெல்லாம் விட்டுப் பிரிய மனம் இல்லைண்ணா. இனி அடுத்த ரவுண்டு வருவோம்ணே என நம்பிக்கையோடு சொன்னார்.
எனக்கு அவரிடம் இருக்கிற நகைச்சுவையைத் தவிர்த்து பிடித்த விஷயம் என்னன்னா அவர் எல்லோரிடமும் நட்பு பாராட்டும் அழகு.
நிறைய நண்பர்கள். அவரவர்களுக்கான அன்பை ஒவ்வொரு வார்த்தையிலும் கொட்டுவார். சக கலைஞர் நன்றாக நடித்துவிட்டால் சந்தோஷமாக பாராட்டுவார்.
அவரது பூத உடலைப் பார்க்க நடிகர்களும், நடிகைகளும், இயக்குநர்களும், மக்களுமாக எக்கச்சக்கமாகக் கூடுகிற கூட்டமே இதற்குச் சான்று.
அற்புதமான கலைஞன்
நாளை மறுநாள் பேரனுக்கு மொட்டை அடிக்கப் போறேன், நீங்க கண்டிப்பாக வரணும். நீங்க வந்து போனால் தான் எனக்கு மனசுக்கு நல்லா இருக்கும். பிரமாதமான விருந்து ஏற்பாடுகள் பண்ணியிருக்கேன். மிரண்டு போயிடுவீங்க என்றார்.
சாதாரண இழப்பு கிடையாது. அற்புதமான கலைஞன். அத்தனை பேரை சம்பாதித்து இருக்கார். மகள் மேல் அவருக்கு அத்தனை பிரியம். அதே மாதிரி மனைவி மருமகனை கொண்டாடுவார். 46 வயதெல்லாம் நம்மை விட்டுப் போவதற்கான வயசே கிடையாது.
அறிமுகப்படுத்தினேன் என்ற பிரியத்தில் மாறாமல் இருந்தார். எந்த நல்லது கெட்டது நடந்தாலும் என்னோடு பேசிக்கொண்டே இருப்பார்.
என்னோட நெருங்கிய வட்டத்தில் இருந்தார். நினைத்தால் வீட்டிற்கு வந்து பார்ப்பார்.
அவருக்கு என் வீடு எப்போதும் திறந்திருந்தது. நடித்திருக்கும் படங்களைப் பற்றிய விஷயங்கள் என எல்லாவற்றையும் பேசுவார்.
ரோபோவின் குடும்பம் எப்படி இதை தாங்கப் போகிறது எனத் தெரியவில்லை. அவர்களிடம் சொல்லவும் இப்போது எனக்கு வார்த்தைகள் இல்லை. வேறு வழி இல்லை. காலம்தான் மருந்து போட வேண்டும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...