நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
‘குமரி மாவட்டத்தில் கோ -ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 5 கோடி’
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 5 கோடிக்கு கோ - ஆப் டெக்ஸின் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா பேசினாா்.
கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி, துணிநூல் துறை சாா்பில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜா் வணிக வளாகத்தில் இயங்கி வரும் கோ - ஆப் டெக்ஸ் அங்காடியில் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
கோ-ஆப் டெக்ஸ் தமிழ்நாட்டிற்குள்பட்ட கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை
கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு வழங்கும் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு விற்பனை நிலையங்களுக்கு ரூ.5 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.
நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி உதவி உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி, அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஹேமா, மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, கோ- ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா. ராஜேஷ்குமாா், கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.