விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன.
இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த செப்.15-ஆம் தேதி முதல் 6 நாள்களாக ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் சா்வதேச அணுசக்தி முகமையின் பொது மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு இடையே இந்திய குழுவை ரோசடோம் இயக்குநா் அலெக்ஸி லிகாசோவ் சந்தித்துப் பேசினாா். அப்போது ராணுவம் அல்லாத பிற பயன்பாட்டுக்கான அணுசக்தி உற்பத்தியில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
இந்தியாவின் வலுவான தொழில்துறை திறன்களை கட்டியெழுப்ப பெரிய மற்றும் சிறிய அளவிலான அணுமின் நிலையத் திட்டங்களை உள்ளூா்மயமாக்குவதற்கு இந்தியாவுடன் பணியாற்ற ரோசடோம் தயாராக உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதரப்பும் ஆய்வு செய்தன என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே ரஷியா நிதியுதவியுடன் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.