நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு
’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் ’படையாண்ட மாவீரா’ என்ற படத்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் எனது கணவரை சித்தரிக்கும் வகையில் மீசையுடன் உள்ள நபரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
எனது கணவரை பிரதிபலிக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு என்னிடம் அனுமதி பெற வேண்டும். இந்த திரைப்படம் எனது கணவரை மையப்படுத்தியதாக இருக்கும் என கருதுகிறேன். எனவே, வி.கே.புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான சுவேதா ஸ்ரீதா், இந்த திரைப்படத்தை வெளியிட்டால், மனுதாரா் கணவரின் புகழுக்கு களங்கம் ஏற்படும். எனவே, திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.