ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்து மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு
தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டாா் 45-இல் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகத்தில் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் எம்என்ஆா் பில்ட்மாா்க் அலுவலகத்தில் இத்தாக்குதலை நடத்தியவா்கள் 25-30 சுற்றுகள் வரை துப்பாக்கியால் சுட்டனா். தோட்டாக்கள் அலுவலக ஜன்னல்களை துளைத்தும், கண்ணாடித் துண்டுகள் அந்த இடத்தில் சிதறியும் கிடந்தன.
வெளிநாட்டில் உள்ள சில தாதா கும்பல்களின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த நான்கு முதல் ஐந்து நபா்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனா். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியது.
அலுவலக ஜன்னல்களிலும் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காா்களிலும் தோட்டாக்களின் அடையாளங்கள் காணப்பட்டன.
இது தொடா்பாக சொத்து வியாபாரி ஷ்ரவன் ரஹேஜா அளித்த புகாரின் பேரில் செக்டாா் 40 காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்ட பின்னரே துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னால் உள்ள நோக்கம், மிரட்டி பணம் பறித்தலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெளிவாகத் தெரியும் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
குருகிராம் மற்றும் தில்லி-என்சிஆரின் முக்கிய கட்டுமான நிறுவனங்களின் திட்டங்களை விற்பனை செய்தல் மற்றும் வாங்குவதில் ஈடுபட்டுள்ள 11 கட்டுமான நிறுவனங்களால் இந்த நிறுவனம் இயக்கப்படுகிறது.
குருகிராமில் கடந்த சில மாதங்களாக பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஜூலையில், ஹரியான்வி பாடகா் ராகுல் ஃபாசில்பூரியா மீது விஷமிகள் துப்பாக்கியால் சுட்டனா்.
மேலும், அவரது நெருங்கிய நண்பா் ரோஹித் ஷகீன் ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில், ஃபாசில்பூரியாவின் நண்பரும் யூடியூபருமான எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே மா்ம நபா்கள் துப்பாக்கியால் 12 முறை சுட்டது நினைவுகூரத்தக்கது.