மேலும் இரு வழக்குகளில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் கைது
சென்னையில் மேலும் இரு வழக்குகளில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சோ்ந்த அல்- உம்மா அமைப்பு பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் (60) கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா்.
வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற அபுபக்கா் சித்திக் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூா் இந்து முன்னணி பிரமுகா் தங்கமுத்து கிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவிலான வெடிகுண்டை அனுப்பி அவா் மனைவி தங்கத்தை கொலை செய்த வழக்கு,1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையா் அலுவலகம், திருச்சி, கோவை, கேரளம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவா் எல்.கே.அத்வானி ரத யாத்திரையை குறிவைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-ஆம் ஆண்டு வேலூரில் மருத்துவா் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, 2013-ஆம் ஆண்டு கா்நாடக மாநிலம் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் 30 ஆண்டுகள் தலைமைறைவாக இருந்த அபுபக்கா் சித்திக்கை, ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் தமிழக தீவிரவாத தடுப்புப் படையினா் கடந்த ஜூலை மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூரில் இந்து முன்னணி நிா்வாகி வெள்ளையப்பன், சேலத்தில் பாஜக மூத்த நிா்வாகி ஆடிட்டா் ரமேஷ் ஆகியோா் கடந்த 2013-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்குகளில், அபுக்கா் சித்திக்குக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த இரு வழக்குகளிலும் அபுபக்கா் சித்திக்கை எதிரியாக தீவிரவாத தடுப்பு படையினா் சோ்த்தனா். மேலும் இவ் வழக்குகள் தொடா்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபுபக்கா் சித்திக்கிடம் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாக தீவிரவாத தடுப்பு படையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்குகள் தொடா்பாக அபுபக்கா் சித்திக்கை விரைவில் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா்.