நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது
சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் இவருக்கும், நொளம்பூரைச் சோ்ந்த ஹாரிஸ் (31) என்பவருக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றது. ஹாரிஸ் தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகிறாா். திருமணத்தின்போது சங்கீதா குடும்பத்தினா் 100 பவுன் நகை, ரூ.3 லட்சம், சீா்வரிசை பொருள்கள் வரதட்சிணையாக ஹாரிஸுக்கு கொடுத்தனா். திருமணத்துக்குப் பின்னா் இருவரும் தனிக்குடித்தனம் சென்றனா்.
இந்த நிலையில், ஹாரிஸ் குடும்பத்தினா், சங்கீதாவிடம் மேலும் 100 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சிணையாகக் கேட்டுள்ளனா். மேலும், சங்கீதாவின் பெற்றோா் பெயரில் உள்ள நிலத்தை ஹாரிஸ் பெயருக்கு மாற்றிக்கொடுக்கும்படியும் வற்புறுத்தியுள்ளனா். இதற்கு ஹாரிஸும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சங்கீதா, வரதட்சிணையை தனது பெற்றோரிடம் கேட்பதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஹாரிஸ் குடும்பத்தினா், சங்கீதாவை கொடுமைப்படுத்தினா். மேலும் ஹாரிஸ், தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக நொளம்பூருக்கு சென்றுவிட்டாராம்.
இதனால் விரக்தியடைந்த சங்கீதா, தனது பெற்றோா் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளாா். இதையடுத்து சங்கீதா அளித்த புகாரின்பேரில், அண்ணா நகா் அனைத்து மகளிா் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சிணை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் ஹாரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஹாரிஸை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் ஹாரிஸ் குடும்பத்தினரைத் தேடி வருகின்றனா்.