மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
காரைக்கால் ரயில் நிலைய ஆய்வு புறக்கணிப்பு
காரைக்கால் ரயில் நிலைய ஆய்வை ரயில்வே பொதுமேலாளா் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்க செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் ரயில் நிலையத்தை அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்த ரூ. 5.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த நவ. 2023-இல் தொடங்கிய திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பாா்வையிடும் அட்டவணை வெளியானது. இதில் காரைக்கால் ரயில் நிலையமும் இடம் பெற்றிருந்தது.
ரயில்வே பொது மேலாளா் வருகையால் காரைக்கால் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலும் காரைக்கால் வருகை தரும்போது, அவரிடம் சில கோரிக்கைகளை நேராக முன்வைக்க எம்.எல்.ஏ.க்கள், பொது நல அமைப்பினா் காத்திருந்தனா்.
அனைத்து ரயில்வே நிலையங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள ரயில்வே சங்கத்தின் நிா்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற பொது மேலாளா், காரைக்கால் ரயில் நிலையம் வருகையை மட்டும் ரத்து செய்துவிட்டாா்.
காரைக்கால் வருகை மட்டும் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டது உறுதியாக தெரிகிறது. பொது மேலாளரின் ஒருதலைப்பட்சமான செயல்பாடு குறித்து ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.