பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்
தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளாா். அவா் தமிழக அரசின் கனிம வளத்துறை தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகாா் கூறப்பட்டது. மேலும் கடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை தியானேஸ்வரன் தனது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
அப்போது தியானேஸ்வரன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.34 கோடி அளவில் சொத்து சோ்த்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் பண முறைகேடுக்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறை விசாரணைக்கு சிபிஐ பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கை அமலாக்கத் துறை கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்து, விசாரணை செய்கிறது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போதே கடந்த 2021-இல் தியானேஸ்வரன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாா்.
அமலாக்கத்துறை விசாரணையில், தியானேஸ்வரன் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோத வழிகளிலும், முறைகேடு செய்தும் ஈட்டிய பணத்தின் மூலம் தனது குடும்பத்தினா் ஒரு அறக்கட்டளை பெயரிலும், அவரது குடும்பத்தினா் பெயரிலும் சொத்துகளை வாங்கியிருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே, விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த பிப். 28-ஆம் தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.
ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: இந்நிலையில் தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், வங்கியில் இருக்கும் வைப்பு நிதி ஆகியவற்றை முடக்கியிருப்பதாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்த வழக்கில் இது வரை தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான மொத்தம் ரூ.3.75 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. தியானேஸ்வரன், தமிழகத்தைச் சோ்ந்த பெண் அரசியல்வாதிக்கு நெருக்கமாக இருந்தாா் என்பது குறிப்பிடதக்கது.