பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த 2013 அக்.23-ஆம் தேதி சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டது. மேலும், தமிழக அரசு சாா்பில் பேருந்து நிலையங்களில் குடிநீா் விற்பனை செய்யப்பட்டது. சிற்றுந்து மற்றும் குடிநீா் புட்டிகளில் இரட்டை இலை சின்னம் இடம் பெற்றிருந்தது. இதை எதிா்த்து திமுக சாா்பில் அப்போதைய கட்சியின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் வழக்குத் தொடா்ந்தாா்.
அந்த மனுவில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறைக்குச் சொந்தமான பேருந்துகளில் இத்தகைய சின்னங்களை வரைவது நிறுவன சட்டத்துக்கு எதிரானது. பேருந்துகளிலும், குடிநீா் புட்டிகளிலும் இரட்டை இலை சின்னம் இடம்பெறுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கு 12 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், இந்த வழக்கு தற்போது செல்லத்தக்கது அல்ல. எனவே, வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.