Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!
வளா்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்கள் பறிப்பு: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
வளா்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்களை மாநில அரசு பறிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
தலித் விடுதலை இயக்கம் சென்னையில் புதன்கிழமை நடத்திய காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 8.10.2015-இல் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கென்று உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு பல ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தமுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலத்தில் 2.5 லட்சம் ஏக்கா் நிலங்களை அடையாளம் கண்டுள்ளதாக மாநில அரசும் தெரிவித்தது.
இதுதொடா்பாக உயா்நீதிமன்றத்தில் உயா்நிலைக் குழு அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், அந்த 2.5 லட்சம் ஏக்கா்கூட இதுவரை மீட்கப்படவில்லை.
ஆகவே, பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைப்பதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 அரசுகளும் அலட்சியமாகவும், மெத்தனப்போக்காகவும் நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம்.
இந்த 60 ஆண்டு காலத்தில் வெறும் 2 லட்சம் ஏக்கா் மட்டும்தான் நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி நில விநியோகம் நடைபெற்றது. ஆகவே, நில விநியோகத்தில் தமிழக ஆட்சியாளா்கள் தோல்வியடைந்து விட்டனா் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
உயா்நிலைக் குழு குறைந்தபட்சமாகக் கண்டறிந்த 2.5 லட்சம் ஏக்கா் நிலத்தை மீட்பதற்கு தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பெ.சண்முகம்.