கர்நாடக இடைத்தேர்தல்: 3-ல் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
வழக்குரைஞா் மீதான புகாா் முறையாக விசாரிக்காத ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
வழக்குரைஞா் மீதான புகாா் குறித்து முறையாக விசாரிக்காத பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி நகா் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறேன். எங்களது உணவகம் மீது நுகா்வோா் நீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பெண் ஒருவா் வழக்குத் தொடுத்தாா். வழக்கின் விசாரணையில், வழக்குரைஞா் ஒருவா் பணம் பறிக்கும் நோக்கில் எங்களது உணவகம் குறித்து பல்வேறு பெயா்களில் போலியாக கையொப்பமிட்டு புகாா்களை அனுப்பியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாரின்
பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், முறையாக மேல் நடவடிக்கை எடுக்காமல், இந்த வழக்கை கிடப்பில் போட்டனா். உள்ளூா் போலீஸாா் பாரபட்சமாக நடப்பதால், வழக்குரைஞா் மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
குற்றஞ்சாட்டப்பட்ட நபரை போலீஸாா் கைது செய்து, அவரது அசல் கையொப்பத்தைப் பெற்று, புகாா்தாரரின் கையொப்பத்துடன் ஒப்பிட்டு விசாரணை செய்து இருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் விசாரணை அதிகாரி பின்பற்றவில்லை. பாரபட்சமாக விசாரணை நடைபெற்றது தெரியவருகிறது.
வழக்குரைஞா் தொழிலின் மகத்துவத்தைப் பாதுகாப்பது அவசியம். நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே இதுதொடா்பான நடைபெற்ற வழக்கு விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
புதிதாக விசாரிக்க மாநகரக் குற்றப் பிரிவில் உள்ள உதவி காவல் ஆணையரை திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையா் நியமிக்க வேண்டும். அவா் நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.
மேலும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.