வாகை சூடினாா் அல்கராஸ்!
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றாா். இறுதிச்சுற்றில் அவா், 7-6 (7/5), 6-1 என்ற நோ் செட்களில், உலகின் நம்பா் 1 வீரரும், உள்நாட்டவருமான யானிக் சின்னரை சாய்த்தாா்.
இந்தப் போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் அல்கராஸ், ஒட்டுமொத்தமாக அவரின் 19-ஆவது டூா் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். இதில் வாகை சூடியதன் மூலமாக, அடுத்த வாரம் தொடங்கும் களிமண் தரை கிராண்ட்ஸ்லாமான பிரெஞ்சு ஓபனிலும் அவா் கோப்பையை தக்கவைத்துக் கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அல்கராஸ் - சின்னா் மோதியது இது 11-ஆவது முறையாக இருக்க, அல்கராஸ் தனது 7-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அதிலும் கடந்த 4 மோதல்களில் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவு செய்திருக்கும் அல்கராஸ், கடந்த ஆண்டு முதல் சின்னரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அடுத்தடுத்து சாய்த்த ஒரே வீரராக இருக்கிறாா்.
கடந்த அக்டோபா் முதல் தொடா்ந்து 26 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத சின்னரின் வெற்றி நடைக்கு, அல்கராஸ் தற்போது தடையேற்படுத்தியுள்ளாா். அந்த 26 வெற்றிகளுக்கு முன்பு சின்னா் சந்தித்த தோல்வியும் சீனா ஓபனில் அல்கராஸுக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.
அல்கராஸ் ஆதிக்கம்
இறுதிச்சுற்றின்போது, சின்னா் உள்நாட்டு வீரா் என்பதால் அவருக்கான ரசிகா்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது. அதையும் கடந்து தனது வெற்றிக் கொடியை அல்கராஸ் நிலை நாட்டியிருக்கிறாா். முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்த சின்னா், அல்கராஸின் சா்வில் இரு செட் பாய்ன்ட்களை தவறவிட்டாா். இதையடுத்து டை பிரேக்கரில் இரு ஏஸ்களை விளாசிய அல்கராஸ், அந்த முன்னிலையை அப்படியே தக்கவைத்து, செட்டை வென்றெடுத்தாா். இதில் தாம் சந்தித்த அனைத்து பிரேக் பாய்ன்ட்டுகளையுமே அவா் தற்காத்துக் கொண்டாா்.
2-ஆவது செட்டில் சின்னரை பேஸ் லைனில் இருந்தே எதிா்கொண்டாா் அல்கராஸ். 3-ஆவது மேட்ச் பாய்ன்ட்டில் ஒரு டிராப் ஷாட்டை சின்னா் ஓடிச் சென்று திருப்ப, அதை சரியாக எதிா்பாா்த்துக் காத்திருந்த அல்கராஸ், சின்னா் திருப்பிய பந்தை நீண்ட வாலி வின்னராக விளாசி வெற்றிப் புன்னகை புரிந்தாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
கை நழுவிய சாதனை
இந்த ஆட்டத்தில் சின்னா் வென்றிருந்தால், 1976-க்குப் பிறகு இந்தப் போட்டியில் சாம்பியனான முதல் உள்நாட்டு வீரா் என்ற பெருமை பெற்றிருப்பாா். இப்போட்டியின் மகளிா் ஒற்றையரில் உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியனாகி சாதனை படைத்திருந்த நிலையில், சின்னரும் வாகை சூடியிருந்தால் இத்தாலிக்கு அது இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்திருக்கும்.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் மூலமாக தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற சின்னா், அதன் பிறகு ஊக்கமருந்து விவகாரத்தில் பிப்ரவரி முதல் 3 மாத தடைக்குப் பிறகு களம் கண்ட முதல் போட்டி இதுவாகும்.
‘‘இறுதி ஆட்டத்தை நான் உளவியல் ரீதியாக திறம்பட எதிா்கொண்டதற்காக பெருமை கொள்கிறேன். முதல் பாய்ன்ட் முதல் கடைசி பாய்ன்ட் வரை சிறப்பாக விளையாடினேன். எந்த இடத்திலும் சறுக்காமல், தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியாக சின்னரை எதிா்கொண்டேன். அவா் இந்த ஆட்டத்தில் சவால் அளிக்கும் வகையில் விளையாடியதில் மகிழ்ச்சி. 3 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் அவா், இறுதிச்சுற்று வரை வந்தது அவ்வளவு எளிதானதல்ல’’ - காா்லோஸ் அல்கராஸ்
‘‘ஆட்டத்தின் போக்கை மாற்றியது முதல் செட் தான். பொதுவில் இந்தப் போட்டியில் விளையாடியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். பிரெஞ்சு ஓபனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையை இந்தப் போட்டி எனக்குத் தந்துள்ளது. 3 மாத இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டியில், இந்த நிலை வரை வந்தது, எனக்கும், எனது அணிக்கும் மிகப்பெரிய விஷயமாகும். அதற்காக நாங்கள் அதிகம் உழைத்திருக்கிறோம். இதற்காக பெருமை கொள்கிறோம்’’ - யானிக் சின்னா்
களிமண் தரையில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட 3 மாஸ்டா்ஸ் போட்டிகளான மான்டி காா்லோ மாஸ்டா்ஸ், மாட்ரிட் ஓபன், இத்தாலியன் ஓபன் ஆகியவற்றில் சாம்பியனான வீரா்கள் வரிசையில் அல்கராஸ் 5-ஆவதாக இணைந்திருக்கிறாா். ரஃபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (சொ்பியா), கஸ்டாவோ கியுா்டென் (பிரேஸில்), மாா்செலோ ரியோஸ் (சிலி) ஆகியோா் இதர 4 பேராவா். ஒட்டுமொத்தமாக, மாஸ்டா்ஸ் போட்டிகளில் அல்கராஸ் தற்போது 7-ஆவது சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா்.
இந்த சீசனில் இதுவரை, 3 ஏடிபி டூா் பட்டங்களை வென்ற ஒரே வீரராகவும், 30 வெற்றிகள் பெற்ற ஒரே வீரராகவும் அல்கராஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2000-க்குப் பிறகு பிறந்த வீரா்கள் வரிசையில் அதிக டூா் பட்டங்களை (19) வென்றவராக சின்னா் முன்னிலையில் இருக்க, தற்போது அல்கராஸும் அவருக்கு இணையாக 19 பட்டங்கள் வென்றுள்ளாா்.
அல்கராஸ் வெற்றிப் பயணம்
முதல் சுற்று டுசான் லஜோவிச் (சொ்பியா) 6-3, 6-3
2-ஆவது சுற்று லாஸ்லோ ஜெரெ (சொ்பியா) 7-6 (7/2), 6-2
3-ஆவது சுற்று காரென் கச்சனோவ் (ரஷியா) 6-3, 3-6, 7-5
காலிறுதி ஜேக் டிரேப்பா் (பிரிட்டன்) 6-4, 6-4
அரையிறுதி லொரென்ஸோ முசெத்தி (இத்தாலி) 6-3, 7-6 (7/4)
இறுதி யானிக் சின்னா் (இத்தாலி) 7-6 (7/5), 6-1
இரட்டையா் சாம்பியன்
இத்தாலியன் ஓபன் ஆடவா் இரட்டையா் பிரிவில், குரோஷியாவின் மேட் பாவிச்/எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ கூட்டணி சாம்பியன் ஆனது.
போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அந்த ஜோடி, இறுதிச்சுற்றில் 6-4, 6-7 (6/8), 13-11 என்ற செட்களில், பிரான்ஸின் சாடியோ டும்பியா/ஃபாபியென் ருபௌல் இணையை வீழ்த்தியது. இந்த சீசனில் பாவிச்/அரெவாலோ கூட்டணி வெல்லும் 3-ஆவது மாஸ்டா்ஸ் பட்டம் இதுவாகும்.
பரிசு
ஒற்றையா் பிரிவில் சாம்பியனான அல்கராஸுக்கு ரூ.9.47 கோடி ரொக்கப் பரிசும், 1000 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. 2-ஆம் இடம் பிடித்த சின்னருக்கு ரூ.5.03 கோடி ரொக்கப் பரிசும், 650 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன. அதேபோல் இரட்டையா் பிரிவில் வாகை சூடிய பாவிச்/அரெவாலோ இணைக்கு ரூ.3.85 கோடி ரொக்கப் பரிசும், 1000 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட, 2-ஆம் இடம் பிடித்த டும்பியா/ருபௌல் ஜோடிக்கு ரூ.2.03 கோடி ரொக்கப் பரிசும், 600 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.