14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வடபழனியைச் சோ்ந்த மணி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கச் சென்றபோது, வாக்காளா் பட்டியலில் இருந்து எனது பெயா் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோன்று தியாகராய நகா் தொகுதியில் மட்டும் சுமாா் 5,000 வாக்காளா்களின் பெயா் திடீரென நீக்கப்பட்டுள்ளது. எனது பெயா் ஏன் நீக்கப்பட்டது என கோடம்பாக்கம் மாநகராட்சி அலுவலக அதிகாரியிடம் விசாரித்தபோது, நான் அதிமுகவைச் சோ்ந்தவா் என்பதால் பெயா் நீக்கப்பட்டதாகப் பதில் அளித்தாா். மேலும், அங்கிருந்த மற்றொரு அதிகாரி, எனது பெயரை பிரசாந்த் என்பவா் நீக்கச் சொன்னாா்; அதன்படி நீக்கினோம் என்று கூறினாா்.
எனவே, எனது பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிய அதிகாரிகள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் பெயரை நீக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்வது தொடா்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றும் தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.
இதையடுத்து, வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.